ADMIN•••1
Admin
Admin
21/6/2012, 9:40 pm
சினிமாக்காரன் என்றதுமே பலரது நினைவுக்கு வருவது, "மோசமானவர்கள்" என்பது தான்! ஆம், ஆரம்ப காலம் முதலே இப்படித்தான் எல்லோரும் சொல்லி வருகிறார்கள், சினிமாக்காரர்கள் என்றாலே மோசமானவர்கள் என்று.

பொதுவாகவே சினிமாவில் இருப்பவர்கள் மீது அப்படி ஒரு குறியீடு இருப்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அதுவும் பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம், கண்ணை மூடிக் கொண்டு சொல்லி விடுவார்கள் "அவள் நடத்தை கெட்டவள்" என்று! ஆனால் அப்படி சொல்பவர்கள் எல்லோரும் சினிமாவிற்கு அப்பாற்பட்டவர்கள் தான் என்பதும் மறுக்க முடியாத உண்மை. தனக்கு சினிமாவைப் பற்றி நிறைய தெரியும் என்று சொல்லிக் கொள்வதற்காக இப்படி பல செய்திகளை திரித்துக் கூறுவார்கள்! எங்காவது ஒரு படப் பிடிப்பைப் பார்த்து விட்டால் போதும், உடனே அனைத்தையும் தெரிந்து கொண்டது போல் கதை அளக்க ஆரம்பித்து விடுவார்கள்...

மேலும், சினிமாவில் உள்ள (அரைகுறையானவர்கள்) சிலரும், சினிமாவிற்கு புதிதாக வரும் பெண்களிடமும் "பல நடிகைகள் 'இப்படித்தான்' வாய்ப்பு பெற்று முன்னேறினார்கள்" என்று கூறி அவர்களை ஏமாற்றி தவறான பாதைக்கும் அழைத்துச் செல்கின்றனர்.

இப்படி சினிமாவில் நடிப்பவர்களை "நடத்தை சரியில்லாதவர்கள்" என்று சொல்ல காரணம் என்ன? ஒவ்வொரு உயிரினத்தையும் அதன் செயல்பாடுகளை, மற்றும் உருவத்தை வைத்து தான் பிரித்திருக்கின்றோம். இப்படி இருந்தால் தான் அவன் மனிதன். எனவே எல்லா மனிதனும் ஒரே எண்ணங்கள் உடையவர்கள் தானே... அப்படியிருக்கும் போது சினிமாவில் இருப்பவர்கள் மட்டும் கெட்டவர்கள் என்றால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
"வாய்ப்பு கிடைக்காத வரையில், அல்லது தவறுகள் வெளியில் தெரியாத வரையில் எல்லா மனிதர்களும் நல்லவர்கள் தான்"

ஆனாலும் ஓட்டு மொத்தமாக சினிமாக்காரர்களை "நடத்தை சரியில்லாதவர்கள்" என்று சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கத் தானே வேண்டும்? அந்தக் காரணம் என்னவாக இருக்கும்.?... எதற்காக அப்படிக் கூறினார்கள்? நடத்தை சரியில்லாதவர்கள் என்று எதை வைத்து தீர்மானித்தார்கள்?

பொதுவாக, மக்களிடம் முதலில் பிரசித்தம் பெரும் எதையும் அவர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறப்பதில்லை! உதாரணமாக, கேபிள் TV என்றால், அனைவருக்கும் SUN TV தான் நினைவுக்கு வரும். அரசியல்வாதி என்றால் அனைவருக்கும் கருணாநிதி தான் நினைவுக்கு வருவார். முகப் பருவுக்கு & சிவந்த நிறத்திற்கு தீர்வு என்ன என்றால் அனைவருக்கும் Fair & Lovely தான் நினைவுக்கு வரும். குளியல் சோப்பு என்றால் ஹமாம் தான் உடனே நினைவுக்கு வரும். இதைப் போலவே தான் சினிமாக்காரர்கள் என்றால் உடனே "மோசமானவர்கள்" என்று நினைவுக்கு வருகிறது!

இப்படி சொல்ல காரணம் என்னவென்றால்? சினிமா இன்று கண்டு பிடிக்கப் பட்டதில்லை! சினிமாக்காரர்கள் தவறானவர்கள் என்று சொல்லப் பட்டதும் இன்றல்ல! ஆனால், இன்றும் பலர் ஏன் அப்படி சொல்லிக் கொண்டிருக்கின்றனர்? காரணம், யாரும் சிந்தித்து முடிவெடுப்பதில்லை. எதையும் ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. மற்றவர்கள் என்ன சொல்கிறார்களோ அதையே தானும் சொல்வதும் தான் இதற்குக் காரணம்.

சரி நாம் செய்திக்கு வருவோம்,
அதாவது, அந்தக் கால மக்கள் சினிமாக்காரர்களை தவறானவர்கள் என்று சொன்னார்கள் என்றால் அதற்கு காரணம் இருந்தது. அதில் ஒரு அர்த்தமும் இருந்தது! ஏனென்றால்?... முதன் முதலில் சினிமாவைப் பார்த்த மக்கள், ஒரு வித கட்டுப்பாடுகளோடு வாழ்ந்து வந்தார்கள்! பெண்கள், ஆண்களை நிமிர்ந்து கூட பார்க்காமல் வாழ்ந்த காலம் அது!

அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு சினிமா என்பது நடிப்பு என்றும், திரையில் தோன்றும் வெறும் பிம்பம் என்றும் தெரியாது. அவர்கள் சினிமாவையும் நிஜம் என்றே நம்பினார்கள். அதுவும் ஒரு வாழ்க்கை தான் என்றும் கருதினார்கள். அசோகனையும், நம்பியாரையும் பார்த்த மக்கள், அவர்களுக்குப் பயந்து ஓடி ஒளிந்த கதைகளையும் நாம் அறிந்திருக்கலாம்!

அதுமட்டுமல்ல, நாம் இன்றெல்லாம் பேய், பூதங்கள் என்று எதையாவது பார்த்தால் தான் பயந்து ஓடுவோம். ஆனால் அந்தக் கால மக்கள், மனிதன் முகத்தையே பார்த்து பயந்து ஓடியிருக்கிறார்கள். ஆம்! சினிமாவில் காட்டப் பட்ட CLOSE-UP காட்சியில் தோன்றிய மனிதனின் முகத்தை பார்த்ததும் "என்ன இது... உடம்பு இல்லாமல் வெட்டப்பட்ட தலை மட்டும் பேசுகிறது..?" என்று அலரி ஓடியிருக்கின்றனர். மேலும் ஒரு படத்தில் இறந்து போன நடிகனை அடுத்தப் படத்தில் பார்த்த போது, அவரை பேய் என்று நினைத்தவர்களும் உண்டு.!

இப்படி, சினிமா தோன்றிய ஆரம்ப காலத்தில் பல வேடிக்கையான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது. அந்த வேடிக்கைகளில் ஒன்று தான் சினிமாக்காரர்கள் மோசமானவர்கள் என்பதும்!

அதாவது, சினிமாவில் ஒரு ஆணும் பெண்ணும் கட்டிப் பிடித்து ஆடுவதை அன்றைய மக்கள் தவறாக கருதினார்கள். மேலும், ஒரு திரைப்படத்தில் ஒரு நடிகனுக்கு மனைவியாக நடித்த ஒரு பெண், அடுத்த திரைப்படத்தில் இன்னொரு நடிகனுக்கு மனைவியாக நடித்தாள். அதைப் பார்த்த அந்தக் கால மக்களுக்கு முதல் முறையாக சினிமாக்காரர்கள் மீது ஒரு தவறான எண்ணம் தோன்றியது!

அடுத்து, ஒரு திரைப்படத்தில் ஒரு நடிகனுக்கு தங்கையாக நடித்த பெண், அடுத்தப் படத்தில் அதே நடிகனுக்கு மனைவியாகவும் நடிக்கிறாள்... அதைப் பார்த்ததும், "அண்ணனும் தங்கையும்" திருமணம் செய்து கொள்வதா?! என்று முகம் சுழித்து, முத்திரைக் குத்தினார்கள் "அவர்கள் நடத்தை சரியில்லாதவர்கள்" என்று!

இந்தத் தவறான எண்ணம் தான் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது! இந்தத் தவறான எண்ணத்தை புரிய வைப்பதற்காகவே, "கொழுக்கட்டைக்கு தலையும் இல்லை, கூத்தாடிக்கு முறையும் இல்லை" என்ற பழமொழியும் தோன்றியது. ஆனால், இதற்கு கூத்தாடிகள் என்றால் முறை தவறி உறவு கொள்பவர்கள் என்று அர்த்தம் இல்லை. சினிமாவைத் தவறாக நினைத்தவர்களுக்கு விளக்கம் சொல்லவே இந்தப் பழமொழி தோன்றியது. ஆனால் அதையும் இன்று தவறாகப் புரிந்து கொண்டு கூத்தாடிகள் முறை தவறியவர்கள் தான் என்றும் சொல்லிக் கொண்டு திரிவதில் அர்த்தம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!

ஆரம்ப கால மக்களுக்கு சினிமா என்றால் என்ன என்றே தெரியாமல் இருந்தார்கள். அதனால் அவர்கள் அப்படிக் கூறினார்கள். ஆனால் இன்று, திரைக்கதை முதல், எந்தக் காட்சிக்கு என்ன லென்ஸ் பயன் படுத்துகிறார்கள் என்பது வரையிலான அனைத்தும் தெரிந்திருந்தும், இன்னமும் "சினிமாக்காரர்கள் மோசமானவர்கள்" என்று சொல்லிக் கொண்டிருப்பது நமது அறியாமையே !

மற்றபடி, எல்லா மனிதர்களும் காதலிக்கின்றனர்.... ஏதாவது ஒரு சூழ்நிலையில் அந்தக் காதல் பிரியவும் செய்கிறது... ஒவ்வொரு நாளும் நீதிமன்றங்களில் எத்தனையோ விவாகரத்துக்கள் நடக்கிறது... எத்தனையோ கள்ளத் தொடர்புகளை நாம் தினம் தினம் செய்தித்தாளில் அறிகின்றோம்... ஆனால் அவர்கள் எல்லாரும் சினிமாவில் நடிக்கவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும்!

என்னதான் அறிவியல் வளர்ந்து கொண்டிருந்தாலும், சில விஷயங்களில் மனிதன் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கிறான் என்பது தான் உண்மை!

இன்னமும் "உலக அழகி" என்றால் "ஐஸ்வர்யா ராய்" தான் பலரது நினைவுக்கு வருகிறார். இப்படி இருக்கும் போது நாம் என்ன சொல்வது?

"ஆளும் வளரனும், அறிவும் வளரனும் அதுதான் வளர்ச்சி...." எனவே, நாம் நம்மை "அப்டேட்" செய்து கொண்டால் நல்லது என்றே எனக்குத் தோன்றுகிறது.

... one line cinema ...

CREATE NEW TOPIC



Information

Introduction - One Line Cinema

From One Line Cinema

Topic ID: 2

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Facebox

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...